திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 30 டிசம்பர் 2023 (11:05 IST)

6,218 அரசுப் பள்ளிகளில் கலைஞர் பெயர்.. தமிழக அரசு உத்தரவு..!

தமிழ்நாட்டில் உள்ள 6,218 அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும்  தமிழ் மன்றங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
, "ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பேருள்ளப் பெருந்தகைமையால் தமிழ்நாட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகள்தோறும் ஏற்படுத்தப்பட்டன. 
 
மன்றம் என்றாலே, அது தமிழுக்கான மன்றமே என்ற அறவுணர்வே பள்ளிப் பிள்ளைகளின் உள்ளத்தில் மேலோங்க வேண்டும்; தமிழ் வளர்ச்சிக்கான திருத்தொண்டர்களாக அவர்கள் தொண்டாற்றும் வாய்ப்பும் வேண்டும் என்ற பெருநோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே பள்ளிகளுக்கான தமிழ் மன்றங்கள். பள்ளிகள் / ஆசிரியர்கள் / மாணவர்கள் எனத் தாங்களே நிகழ்த்திவந்த தமிழ் மன்றங்கள், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நிதிநல்கையும், அரசேற்பும் பெற்றுள்ளன என்பது வரலாற்றுப் பெருமிதம் ஆகும். 
 
அதற்கான முன்மொழிவாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது. மாண்புமிகு தொழில்கள் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு தொல்லியல் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 
"அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்".
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
Edited by Mahendran