கருத்துக் கணிப்பு என்பது ராசிபலன் போன்றது – கி வீரமணி பதில் !
தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஜோதிடம், ராசிபலன் போன்றதே என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். ஒருமாதமாக தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததை அடுத்து கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று வாக்குப்பதிவுக்கு முடிந்ததும் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் உள்ளது. அவர்களின் கருத்துக்கணிப்பின் படி பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது.
அதேப் போல நியூஸ் 18 ஊடகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதரக் கட்சிகளான அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்புக் குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் வேளையில் திக தலைவர் கி வீரமணி கருத்துக் கணிப்புகள் ராசிபலன் போன்றது எனக் கூறியுள்ளார். மேலும் ‘ இந்தக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும். அல்லது தவறாகும் பட்சத்தில் வெளியிட்டவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வெறும் வாயை மெல்பவர்களுக்கு சிறிது அவல் கிடைத்தமாதிரிதான்’ எனத் தெரிவித்துள்ளார்.