திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (17:32 IST)

பெகாசஸ் உளவு… கி வீரமணி கண்டன அறிக்கை!

உலகத்தையே இன்று ஆட்டம் காண வைத்துள்ள சொல்லாக பெகாசஸ் உளவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி  வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:-

இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த மென்பொருள்மூலம் உலகின் பல நாடுகளிலும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஆயிரம் குடிமக்களின் செல்பேசி இணைப்புகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது. அபாயகரமானது. மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்துவது என்பது போதுமானதல்ல, உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு விசாரணை உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டு வரவேண்டும்.

ஏறக்குறைய 1000 இந்திய குடிமக்களின் செல்பேசி இணைப்புகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் அந்நாட்டு நிறுவனம் (NSO), கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ (Pegasus Spyware) எனும் உளவுக் கணினி மென்பொருளை விற்பனை செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டு அரசு ஒப்புதலுடன் பிறநாட்டு அரசுகளுக்கு மட்டுமே உளவுக் கணினி மென்பொருளை வழங்குவதை அந்த இஸ்ரேல் நாட்டு நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து டோரண்டோ பல்கலைக் கழக குடிமக்கள் குழு (University of Toronto’s Citizens Club) நடத்திய ஆய்வின் மூலம் இந்தியாவில் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள செல்பேசிகளில் 300 இணைப்புகள் சோதனைக்குள்ளாகி உள்ளன என்பதும், 22 தொலைப்பேசிகள் தடயவியல் ஆய்வுக்கு ஆளாகியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதில் 10 தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவுக் கணினிப் பொருளின் தாக்குதலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 தொலைப்பேசிகள் மீதான கணினித் தாக்குதல் உறுதி செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் முழுமையான ஆதாரம் சார்ந்தவை, நம்பகத் தன்மைமிக்கவை. இந்தியர்களின் தொலைப்பேசி இணைப்புகள் இந்திய அரசு அல்லது வெளிநாட்டு அரசின் கண்காணிப்பில் வந்துள்ளன. இது ஓர் அபாயகரமான அச்சமூட்டும், பண்பாடற்ற திகிலூட்டும் சட்ட மீறல் என்பதில் அய்யமில்லை. உலகின் 14 நாடுகளில் உள்ள தலைவர்கள் உள்பட உளவு பார்க்கப்பட்டுள்ளனராம்.

இந்தியாவில் இப்படிக் கண்காணிக்கப்படும் நிலைகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர், தேர்தல் வியூகர் கிஷோர் பிரசாந்த்குமார், பத்திரிகையாளர் எனப் பலர் உள்ளனர்.

பாஜகவைச் சார்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் இந்த பட்டியலில் அடங்குவர். இந்த செய்தியினை அமெரிக்க நாட்டு ‘தி வாசிங்டன் போஸ்ட், ‘தி வால்ஸ்டிரீட் ஜர்னல், இங்கிலாந்து நாட்டு ‘தி கார்டியன், இந்திய நாட்டின்‘தி வையர்,‘பாரீஸ் பார் பிட்டன் ஸ்டோரிஸ்’ பத்திரிகையிடமும், ஆம்னெஸ்டியிடமும் கசிந்து வெளிக்கொணர்ந்துள்ளன.

ஐ போன் வசதியுள்ள செல்பேசியில் நேரடியாக பெகாசஸ் உளவுக் கணினி மென்பொருளை ஏற்றிட முடியும். இதற்கு செல்பேசி வைத்திருப்பவர் அனுமதி தேவையில்லை. உரியவருக்குத் தெரியாமலேயே அறிவு நாணயமற்ற முறையில் ஒழுக்கக்கேடாக உளவுத் தாக்குதலை நடத்திட முடியும். ஒரு வாட்ஸ் அப் அழைப்பினை, கண்காணிப்பிற்கு உள்ளான செல்பேசிக்கு அனுப்பினால் உளவுக் கணினி மென்பொருள் தனது வேலையினைத் தொடங்கிவிடும்.

செல்பேசி வைத்துள்ளவர் பேசிடுவதையும், செய்தி அனுப்பிடும், பெற்றிடும் அழைப்புகள் பற்றிய விவரங்கள் முழுவதையும் உளவுக் கணினி மூலம் சேகரித்திட முடியும். இதைவிடப் பேராபத்து எதுவாக இருக்க முடியும்? செல்பேசி பயன்படுத்துபவர் அறியாமலேயே அவருக்குத் தொடர்பில்லாத சில செய்திகளை அவரது செல்பேசியில் பதிவேற்றிட முடியும் எனக் கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு செல்பேசியிலும் இந்த உளவுப் பணியினை நடத்திட முடியும்.

பழிவாங்கும் திட்டத்துடன், ஒரு நபருக்கு செல்பேசியில் தடயத்தை ஏற்படுத்தி, அவர்மீது கடுமையான சட்டத்தின்படி நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்படி கணினி பேசி மூலம் உளவுப் பார்க்கப்படுவது - இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தடையிடா தனி நபர் ரகசிய (Rights of Privacy) அடிப்படை உரிமையில் குறுக்கீடு செய்வது, அத்துமீறித் தலையிடுவது, அநாகரிகமான உரிமை மறுக்கும் மோசமான செயலாகும்.

இதே நிறுவனம் கணினி மூலம் உளவுப் பார்க்கும் செயல்பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆளும் பாஜக தரப்பு அப்படிப்பட்ட செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என சாமர்த்தியமாகப் பதிலளித்தது. ஆனால், அந்தப் பதிலில் அந்த இஸ்ரேலிய நிறுவனத்திற்கும், இந்திய அரசிற்கும் தொடர்பே கிடையாது என தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு பயணித்த ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான்.

தற்போது உளவுப் பார்க்கும் பணி பற்றி ஆய்வு நடத்தி ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டபோது பாஜகவின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் உளவு நடக்கவில்லை என்று மறுத்துள்ளார். இந்த முறை உளவுப் பார்க்கப்படுவதற்காக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நபர்கள் பொது வாழ்க்கையில் பரவலாக அறியப்பட்டுள்ளவர்கள் ஆளும் தரப்பினை விமர்சித்து வருபவர்களும்கூட.

ஏற்கெனவே மகாராட்டிர மாநில பீமா கோரேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை சுமத்தப்பட்டு, சிறைவாசத்தில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது கணினியில் தங்களுக்குத் தொடர்பில்லாத செய்திகள் ஏற்றப்பட்டு, அதன் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டது என அரசு நடவடிக்கைக்கு ஆளானோர் தரப்பு வாதத்தை, இந்தப் புதிய கணினி உளவுப் பார்த்திடும் செயலோடு இணைந்து நினைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற, தேர்தலில் எதிரணியினரின் வியூகம் பற்றி உளவு பார்த்து வெற்றி பெற்ற அதிபர் நிக்சன், ‘வாட்டர் கேட்’ ஊழலுக்கு ஆளாகி, பதவி விலக நேரிட்டதும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டிய முக்கிய தகவலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் கணினி உளவுச் செயல் வெறும் பேச்சளவில் மட்டுமே மறுக்கப்படக் கூடியதல்ல. இதுகுறித்து உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு விசாரணை உச்சநீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவரவேண்டும்.

நேரடிப் பார்வையில் உச்சநீதிமன்றத்தால் இந்த விசாரணை நடத்தப்படுவதே சரியானதாக இருக்கமுடியும். நாடாளுமன்ற நிலைக் குழு விசாரிக்கும் என்ற தகவல் வரவேற்கத்தக்கதே. தாமதிக்காமல் விரைந்து உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். தேசப் பாதுகாப்பு, தேச நலனில் அந்நிய சக்திகளின் குறுக்கீடு கூடாது எனப் பலமாக கூறிவரும் மத்திய பாஜக அரசு, இந்தியர்களின் அடிப்படை உரிமையிலேயே குறுக்கிட்டு அவர்கள்மீது பழிவாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட ஏதுவான பெகாசஸ் கணினி மென்பொருள் உளவுச் செயல் பற்றிய உண்மைகள் வெளிவரட்டும்.

இஸ்ரேல் நிறுவனம் இந்த மென்பொருளை தனியாருக்கு விற்பதில்லை என்று சொல்லும் நிலையில், இந்தியாவுக்குள் வந்தது எப்படி? அரசுதானே ஈடுபட்டு இருக்க முடியும்? என்ற வினா எழுகிறதா, இல்லையா? இது மிகவும் முக்கியமானதாகும். மத்திய அரசு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ளுமா?