வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (18:27 IST)

பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை - போட்டுடைத்த கே.பி. முனுசாமி

அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அதிமுக அம்மா  அணி எனவும், ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி எனவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தினகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இரு அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லாமல் போனது. 
 
இதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவையும், கலைத்து விட்டதாக சமீபத்தில் ஓ.பி.எஸ் அறிவித்தார். மேலும், இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு  பேட்டி  அளித்த அமைச்சர் ஜெயக்குமார் “முதல்வருடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்தித்து பேசி வருகிறார்கள்.  பேச்சுவார்த்தை கலைக்கப்பட்டாலும் அணிகள் இணைய பேச்சு வார்த்தை தொடர்கிறது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர ஓ.பி.எஸ் அணி ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுகவை வழி நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைக்க இரு அணிகளும் திட்டமிட்டுள்ளோம். அதில், ஒபிஎஸ் தரப்பில் 2 பேரும் எடப்பாடி தரப்பில் 3 பேர் அதில் இருப்பார்கள். கட்சியை வழிநடத்தும் குழு தலைவராக ஓபிஎஸ் மற்றும் துணைத் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்க வாய்ப்புள்ளது” எனவும் அவர் தெரிவித்தார். 
 
இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதால், விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு அதிமுக ஒரே அணியாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் திடீர் திருப்பமாக, இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி “ஜெயக்குமார் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. அதிமுக அம்மா அணியுடன் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. தேவையில்லாமல் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் இரு அணிகளும் இணையுமா? இணையாதா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.