வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (15:55 IST)

இனிமேல் உண்ணாவிரதமே இருக்க மாட்டேன்: வாபஸ் பெற்ற ஜீயர்!

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் தனது உண்ணாவிரதத்தை இன்று முடித்துக்கொண்டார்.
 
ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது.
 
இதனையடுத்து வைரமுத்து தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜம் பிடிவாதமாக தனது இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார்.
 
இந்நிலையில் ஜீயர் தனது உண்ணாவிரதத்தை தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும் என எஸ்.வி.சேகர், எச்.ராஜா, பக்தர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்ததை அடுத்து உண்ணாவிரதத்தை இன்று கைவிட்டார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜீயர், உலக மக்களின் நன்மைக்காக உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுகிறேன். என்னுடைய உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளையும். இனி உண்ணாவிரதம் இருக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.