சச்சினுக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா..? ஒபிஎஸ் மகன் அறிக்கை
சச்சினுக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா..? என கேள்வி எழுப்பி முன்னாள் துணிஅ முதல்வர் ஒபிஎஸ் மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசுக்குச் செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறு சிறு குறைகளை மிகைப்படுத்திப் பேசுவது மனித இயல்பாக இருக்கின்றது.
மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரி விலக்கு கேட்பது அவரவர் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய் அவர்களுக்கு உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்று ஆகாது. இதேபோல் 2012இல் வரி விலக்கு கேட்டு சச்சின் தெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தனர். இதில் சச்சினுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
எனவே சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவு இடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் பல கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டி தான் உயர் நிலைக்கு வரமுடியும். அப்பேர்ப்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.