1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 மே 2016 (16:07 IST)

’160 இடங்கள் ம.ந.கூட்டணிக்கு; ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் ஜெயலலிதா அப்செட்’ - விஜயகாந்த் தாக்கு

ஒரு ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களை பிடிக்கும் என்றார். அதனால் ஜெயலலிதா அப்செட் ஆகியுள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
கும்பகோணத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி சார்பில் போட்டியிடும் திருவையாறு தொகுதி சிபிஎம் வேட்பாளர் வெ.ஜீவக்குமார், பாபநாசம் தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி. ஜெயக்குமார், கும்பகோணம் தொகுதி தேமுதிக வேட்பாளர் த.பரமசிவம், திருவிடைமருதூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சா.விவேகானந்தன் ஆகியோரை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், ”சொன்னதை செய்தேன் சொல்லாததையும் செய்தேன் என்று ஜெயலலிதா பேசி வருகிறார். பந்தா பகட்டு,பொய் புரட்டுதான் ஜெயலலிதா. தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வேன் என்கிறார் அவர். முதலில் உங்கள் மந்திரிமார்கள் எம்எல்ஏக்கள் உங்களிடம் கூனிக்குறுகி நிற்கிறார்களே அவர்களை தலைநிமிர வையுங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு தன்னால் நிமிர்ந்து விடும்.
 
தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகவும் ஊழல்கட்சிகள்தான். இவர்களை நாம் அப்புறப்படுத்த வேண்டும். அது நம்மால் மட்டும்தான் முடியும். நாங்கள் ஆறு பேர் ஆறுமுகம். நாங்கள்தான் தமிழ்நாட்டின் ஏறுமுகம்.
 
ஜெயலலிதாவிற்கு 110 விதி வியாதியாக இருக்கிறது. இதுவரை 110 விதியின் கீழ் அறிவித்தது ஒன்றுமே செய்யவில்லை. கோடிகோடியாக திட்டம் போட்டு அறிவிக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு போய்சேரவில்லை.
 
தவசி திரைப்படத்தில் நான் நடித்த பகுதி கும்பகோணம். இங்கு பாத்திர தொழில், திருபுவனம் பட்டு நெசவு தொழில், மிக மோசமாக நலிவடைந்துள்ளது. மாறி மாறி வந்த முதலமைச்சர்கள் தமிழகத்தை முன்னேற்றவே இல்லை.
 
கோடி கோடியாக ஊழல் செய்தவர்களால் நமக்கு பசிதான் மிச்சம். கரும்பு விலை, நெல் விலை ஏறவே இல்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களை பிடிக்கும் என்றார். அதனால் ஜெயலலிதா அப்செட் ஆகியுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.