Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (18:05 IST)
ஜெயலலிதா கட்டை விரலை தூக்கி காண்பித்தார்: போட்டுடைத்தார் வித்யாசாகர் ராவ்!
ஜெயலலிதா கட்டை விரலை தூக்கி காண்பித்தார்: போட்டுடைத்தார் வித்யாசாகர் ராவ்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூன்று முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
ஆனால் அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என கூறப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வதந்திகள் பரவுவதால் அதனை தடுக்க ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், ஜெயலலிதா தனது கட்டை விரலை தூக்கி காண்பித்து தான் குணமாகி வருவதை அவருக்கு உணர்த்தியதாக மருத்துவர்கள் முதன் முறையாக கூறினார்கள்.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெய்லியோ என்ற ஆங்கில இணையதளத்துக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில், உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க ஓரிருமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒருமுறை நான் சென்றிருந்தபோது, தான் குணமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார் என முதல் முறையாக கூறியுள்ளார்.