சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை: பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!
சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை: பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஆறுமுகசாமி.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எந்த பதிலும் கொடுக்காமல் இருந்தது. எனவே, இரு அணிகளும் நீண்ட நாட்கள் இணையாமலே இருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியிலிருந்து தினகரனையும் விலக்கி வைத்தது. அதனையடுத்து, இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது.
ஆனால், இது நடந்து ஒன்றரை மாதங்களாகியும் விசாரணைக் கமிஷனை எடப்பாடி அரசு நியமிக்கவில்லை. இதுபற்றி திமுக செயல் தலைவர் நேற்று கூட ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது பொறுப்பேற்றுள்ள ஆறுமுகசாமி இன்னும் சில தினங்களில் அல்லது அக்டோபர் 3-ஆம் தேதி தனது விசாரணையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வருவதாக் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.