1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (10:18 IST)

ஜெயலலிதாவை தடுத்த அதே ஜோதிடர் எடப்பாடியையும் தடுக்கிறாராம்?

ஜெயலலிதாவை தடுத்த அதே ஜோதிடர் எடப்பாடியையும் தடுக்கிறாராம்?

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சென்னை அடையாறில் சார்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளாததற்கு ஒரு ஜோதிடர் தான் காரணம் என கூறப்படுகிறது.


 


முதலில் இந்த மணி மண்டப திறப்பு விழா நிகழ்வில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகிப்பார் எனவும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
 
ஆனால் சிவாஜி குடும்பத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எங்கள் தந்தைக்கு மணி மண்டபம் அமைப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார். ஆனால், அந்த திறப்புவிழாவில் முதல்வரோ துணை முதல்வரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.


 
 
தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளாதது அப்பாவை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம் என கூறியிருந்தனர்.
 
இதனையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளாமல் திட்டமிட்டு தவிர்த்துள்ளார். அன்றைய தினம் அவர் சென்னையில் இருக்காமல் சேலத்தில் இருக்க முடிவு செய்துள்ளார்.


 
 
சிவாஜி மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்காமல் தவிர்க்க காரணம் ஒரு ஜோதிடர் என கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார். தினமும் கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா இந்த சிலையை பார்த்துவிட்டு தான் செல்வர். இதனையடுத்து ஜெயலலிதாவிடம் ஜோதிடர் ஒருவர் தினமும் உங்க பார்வையில் படுறது போல அந்த சிலை இருப்பது நல்லது இல்லை என கூற, அந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்ற உத்தரவிட்டார் ஜெயலலிதா.
 
நீதிமன்ற முறையீடல்களுக்கு பின்னர் அந்த சிலை அகற்றப்பட்டது. சிவாஜி சிலை விவகாரத்தில் ஜெயலலிதாவை தடுத்த அதே ஜோதிடர் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடமும் சிவாஜி சிலை உங்களுக்கு ராசியில்லை எனவே சிலை திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.