செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (09:20 IST)

கைதான 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 21 பேர் மற்றும் 92 படகுகளை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக இயந்திரப் படகில் சென்ற 6 தமிழக மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை (ஜூன் 9) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்த இடத்தில் தற்போது மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அல்லது கடத்தப்படும் அச்சத்தை தமிழக மீனவர்கள் எதிர்கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் தற்போது இலங்கைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்போது, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை.
 
இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் உயர்நிலை அளவிலான அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும் அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பான 1974, 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. எனவே இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை பிரச்னை முடிவு பெறாத ஒன்றாகும்.
 
இந்தியா-இலங்கை இடையே உருவான அந்த சட்ட விரோதமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உறுதியாக கேட்டுக் கொள்கிறது.
 
இப்போது கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள், ஒரு மீன்பிடி படகு ஆகியோரை சேர்த்து, மொத்தமுள்ள 21 தமிழக மீனவர்களையும் அவர்களின் 92 மீன்பிடிப் படகுகளையும் மீட்பதற்காக, தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இதை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.