1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (16:46 IST)

நீ உயிரோடு இருந்தால் அதுவே போதும் - அம்ருதாவிடம் கூறினாரா ஜெயலலிதா?

தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்காக தனது வளர்ப்பு பெற்றோர், தன்னை மறைத்து வளர்த்தனர் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா கூறியுள்ளார்.


 

பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அனுப்பியதோடு, பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.
 
நடிகர் சோமன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உண்டான காதல் மூலம் 1980ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி தான் பிறந்ததாகவும், ஜெ.வின் சகோதரி சைலஜா-சாரதி தம்பதியினருக்கு தான் தத்து கொடுக்கப்பட்டதாகவும், ஜெ.வின் அத்தை மகள் ஜெயலட்சுமியே பிரசவம் பார்த்தார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2015ல் தனது சைலஜா இறந்துவிட்டதாகவும், அதன் பின்னரே, உறவினர் மூலம் தனக்கு உண்மை தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 
 
ஆனால், ஜெ.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த உண்மையை இதுவரை கூறவில்லை எனவும்  இதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜெ.வின் உடலை தோண்டியெடுத்து, டி.என்.ஏ சோதனை செய்து பார்க்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


 

பரபரப்பான இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
 
இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த அம்ருதா “நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவர்தான் என் தாய் என் உறவினர்கள் அனைவரும் கூறினர். அதை நிரூபிக்கவே டி என். ஏ சோதனை செய்யுமாறு கேட்டேன். 
 
போயஸ்கார்டன் வீட்டில் அவரை சந்திக்கும்போதெல்லாம், இங்கிருந்து நீ சென்றுவிடு.. நீ உயிரோடு இருந்தால் போதும் என ஜெயலலிதா பலமுறை என்னிடம் கூறினர். என்னை ஆரத்தழுவி, கட்டியணைத்து முத்தம் கொடுப்பார். அவர்தான் என் அம்மா என்பது இப்போதுதான் புரிகிறது. அதை நான் உணர்கிறேன். விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என அம்ருதா கூறினார்.
 
அம்ருதாவின் இந்த பேட்டி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.