திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (08:55 IST)

ஐ.டி. ரெய்டில் சிக்கிய முக்கிய சி.டி - அதிர்ச்சியில் வி.வி.ஐ.பிக்கள்

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு முக்கிய சிடி சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாதுரை. இவரின் எஸ்.பி.கே நிறுவனம் கட்டுமானப்பணிகள் மற்றும் முக்கிய சாலைப்பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறது. இவரின் மகன்கள் கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் என அனைவரும் இந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார்கள்.
 
தமிழகம் முழுவதும் இவர்கள் அரசு பணிகளை செய்து வருவதால் பல ஊர்களிலும் செய்யாதுரைக்கு அலுவலகங்கள் இருக்கின்றன.  செய்யாதுரை, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ஏராளமான அரசு பணிகளை டெண்டர் எடுத்துள்ளார். இதில், அவர்கள் பல கோடிகள் லாபம் அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில்தான், இவர்கள் வரி ஏய்ப்பு செய்தது தெரியவர, கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் இவர்களின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.180 கோடி பணம், 105 கிலோ தங்கம், இதுபோக முக்கிய சொத்து ஆவணங்கள் என அனைத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 
அதோடு செய்யாதுரையிடமிருந்து ஒரு முக்கிய சி.டி.ஐயும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனராம். அந்த சிடி-யில் 42 பேரின் உரையாடல்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பலர் அவரிடம் பண விவகாரம் குறித்து பேசிய உரையாடல்களை அவர் பதிவு செய்து வைத்துள்ளாராம். இந்த சி.டி.தான் தற்போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
 
ஆளும் அதிமுக பிரமுகர்கள் மட்டுமின்றி அவரிடம் டீல் வைத்திருந்த மற்ற கட்சியினர் பேசிய தகவல்களும் அதில் பதிவாகியுள்ளதாம். இது தொடர்பான தகவல்கள் வெளியானால், பல உண்மைகள் வெளியே வந்து விடும் என்பதால் செய்யாதுரையுடன் தொடர்பில் இருக்கும் பல அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.