வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:15 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்க்கு இடைக்காலத் தடை

ஏ.ஆர்.ரஹ்மான்

தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்கு சேவை வரி செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஒரு இசையமைப்பாளர் தன்னுடைய படைப்புகளின் முழு காப்புரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கினால் அந்த இசையமைப்பாளருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி. ஆணையர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனை தொடர்ந்து “இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமை பட தயாரிப்பாளர்களுக்கு தான் உரிமையானது” எனவும் ஜி.எஸ்.டி. ஆணையரால் அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு மார்ச் 4 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அம்மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படியும் ஜி.எஸ்.டி. ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்த மனுவில், ”காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது சேவை அல்ல, ஆதலால் சேவை வரி விதிப்பது தவறு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.