செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 30 மார்ச் 2023 (10:59 IST)

இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம்; 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! – திருவள்ளூரில் அதிர்ச்சி!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக பெரும் புகழை அடைந்த 9 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கற்பகம் தம்பதியின் மகள் பிரதிக்‌ஷா. சிறுவயது முதலே குறும்புத்தனம் மிக்க பிரதிக்‌ஷா வளர்ந்த பின் இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்குத் தொடங்கி அதில் சினிமாவில் வரும் பாடல் காட்சிகள், காமெடி காட்சிகளுக்கு அதே போன்ற முக அசைவுகளை செய்து வீடியோ ரீல்ஸ் வெளியிட்டு வந்தார்.

சிறுமியாக பிரதிக்‌ஷாவின் இந்த க்யூட் வீடியோக்கள் பெரும் வைரலாகி அவருக்கு புகழையும் தேடித் தந்தது. பலரும் அவரை இன்ஸ்டா குயின் என்று அழைக்கும் அளவுக்கு அவர் பிரபலமானார். 9 வயதான பிரதிக்‌ஷா 4ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் தெருவில் சகக் குழந்தைகளோடு பிரதிக்‌ஷா விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பிரதிக்‌ஷா படிக்காமல் விளையாடிக் கொண்டே இருப்பதாக மற்ற சிறுவர்கள் முன்னே திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டு சில மணி நேரங்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீடு உள்பக்கமாக பூட்டியிருக்கவே ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது பிரதிக்‌ஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடனை ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்ற கிருஷ்ணமூர்த்தி பிரதிக்‌ஷாவை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பிரதிக்‌ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்பது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதில் கட்டில் மேல் ஸ்டூல் போட்டு பிரதிக்சா துணி ஒன்றை ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டது தெரிய வந்துள்ளது. சரியாக தூக்கிட தெரியாமல் தொங்கிய பிரதிக்‌ஷா சுமார் 1 மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K