தமிழக முதல்வருக்கும், காட்டேரி கிராம மக்களுக்கும் நன்றி! – இந்திய விமானப்படை!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு நடவடிக்கைகளில் உதவிய முதல்வர், மக்கள் உள்ளிட்டோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி கொண்டு செல்லப்பட்ட உடல்களுக்கு நேற்று ராணுவ மரியாதையுடன் இறுதி காரியங்கள் செய்யப்பட்டன.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடனே அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் துரிதமாக தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டதோடு உடனடியாக 3 பேரை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் தாமதமின்றி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய விமானப்படை “ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையினருக்கு நன்றி. இதுபோலவே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.