ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (16:47 IST)

அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை.! தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா.? பிரேமலதா கண்டனம்..

premalatha vijaynakanth
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டியது, தற்போதைய அரசின் தலையாயக் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை பொருள் கைப்பற்றுவது மிகவும் அதிகமாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
 
டாஸ்மாக் கடைமூலம் மக்களைப் போதைக்கு அடிமையாக்கபட்ட நிலையில், இந்தப் போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும் நமது முதலமைச்சர் பேசும்போதெல்லாம் "போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது லட்சியம், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்றெல்லாம் தேர்தலுக்கு முன்னால் பேசுவார்.இப்பொழுது அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
 
இதைப் பார்க்கும்பொழுது, சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இன்றைய திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் பள்ளி மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் என ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே போதைக்கு அடிமையாகி, இந்தியாவிலேயே நான்காவது அதிக போதைப் பொருட்கள் விற்பனையாகின்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக இளைஞர்களைக் குறி வைத்து, நடத்தப்படும் இந்தப் போதை விற்பனை, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஒரு தலை குனிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் திமுக கட்சியைச் சார்ந்த, ஜவஹர் சாதிக் (திரைப்பட தயாரிப்பாளர்) தற்பொழுது 2000 கோடி போதை பொருட்களைக் கடத்தி இருப்பது, மிகவும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் இதைத் தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இனி எந்த ஒரு இடத்திலும் போதைப் பொருட்கள் கிடைக்காத நிலையை உருவாக்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனையென இவை அனைத்தும் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டியது, தற்போதைய அரசின் தலையாயக் கடமை என்று பிரேமதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 
இல்லையென்றால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்பது போல் ஆகிவிடும், எனவே உடனடியாக முதலமைச்சரும் தமிழக அரசும் இதைப் பற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.