வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (22:30 IST)

தமிழகத்தில் திமுகவின், காட்டாட்சி நிலவுகிறது - பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் திமுகவின், காட்டாட்சி நிலவுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

''மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் ஒன்பது ஆண்டு கால நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், தென்சென்னை மாவட்டத் தலைவர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் இன்று வெகுச் சிறப்பாக நடந்தேறியது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நல்லாட்சியில், உலக அளவில் இந்திய பொருளாதாரம் பல மடங்கு முன்னேறியிருக்கிறது. உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், தமிழக மக்கள் பெருமளவில் பயன்பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் திமுகவின், காட்டாட்சி நிலவுகிறது. அவதூறு பரப்புபவர்களைத் தங்கள் அலுவலகத்தில் வைத்துக் கொண்டு, திமுக ஆட்சியின் அவலத்தை மக்களுக்குக் கொண்டு செல்பவர்கள் மீது, வழக்கு தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயல்கிறது. தமிழக பாஜக  மாநிலச் செயலாளர் திரு  எஸ்.ஜி. சூர்யா
அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்திருக்கிறது. இதற்கெல்லாம் பாஜக தொண்டன் அஞ்சப் போவதில்லை.

திமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழல் செய்த அமைச்சரைக் காப்பாற்ற திமுக முயல்கிறது. திமுகவில் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதே லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு சிபிஐயிடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்க் குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கிறது திறனற்ற திமுக. திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, ஊழல் மிகுந்ததாகவும், தமிழ் மக்களுக்கெதிரானதாகவும்தான் இருந்திருக்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டணி திமுக கூட்டணி.

ஊழலற்ற நல்லாட்சி தொடர, தேசம் பாதுகாப்பாகத் தொடர, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பெருவாரியான வெற்றியை பெற்று பாரதப் பிரதமரின் நல்லாட்சி தொடர, நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

கூட்டத்தில்,   தமிழக பாஜக  மாநிலத் துணைத் தலைவர்கள் திரு  துரைசாமி,
,திரு  கரு நாஜராஜன்,  திரு  ஸ்ரீதர், மாநிலச் செயலாளர்கள் திரு கராத்தே தியாகு , திருமதி பிரமிலா மாநிலத் தலைவர் திரு. சிவா, மற்றும் சிறப்பு அழைப்பாளராக, சமீபத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமைத்ரேயன்,ஆகியோர் மற்றும், மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.