தமிழ்நாட்டை இந்தியாவின் நிதிநுட்பத் தலைநகரமாக உயர்த்தும்! - முதல்வர் முக. ஸ்டாலின்
தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நிதிச் சேவைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்திடும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன்.
பெரும் தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் அவர்கள் மிக முன்பாகவே தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியைக் கணித்துச் சென்னையில் டைடல் பூங்காவினை அமைத்தார். இந்தியாவிலேயே முதலாவதாகத் தகவல் தொழில்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கையை வகுத்து வெளியிட்டார். இதன் காரணமாக ஐ.டி. துறையில் தமிழ்நாடு இன்று முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது.
அதுபோலவே, நிதிநுட்ப நகரமும் நிதிநுட்ப கோபுரமும் முறையே 12 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 80 ஆயிரம் பேருக்கும், 7 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பளித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் நிதிநுட்பத் தலைநகரமாக உயர்த்தும்! என்று தெரிவித்துள்ளார்.