1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (09:50 IST)

இரட்டை இலையில் போட்டியிடுவேன்; தினகரனை தோற்கடிப்பேன் - மதுசூதனன் சவால்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், டி.டிவி தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுவாக இடைத்தேர்தல் என்றால் அது ஆளும் கட்சிக்கு தான் சாதகமாக அமையும். ஆனால் இந்த முறை ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளனர். இவர்கள் அல்லாமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளார். சசிகலா அணி மீது பொதுமக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர்.  
 
தீபா முதல்முறையாக களமிறங்கியுள்ளார். அத்தை தொகுதியில் வெற்றிப் பெறுவேன் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த பிரிவினைகளால், எதிர்க்கட்சியான திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் மருதுகணேஷ் என்பவரை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளனர். சசிகலா அணியில் தினகரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 
 
அதேபோல், ஓபிஎஸ் அணியில் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “நான் 50 ஆண்டுகாலமாக ஆர்.கே.நகர் தொகுதியில் வசித்து வருகிறேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது, இந்த தொகுதிக்கு பல நன்மைகளை செய்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” என அவர் கூறினார்.