1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (21:59 IST)

மகளிர் தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உற்சாக பங்கேற்பு

womens day
உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். 
 
சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு அவர்கள் முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது. 
 
பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார். 
 
மண்வாசனை நிறுவனத்தின் மேனகா அவர்கள் பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது. பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது. 
 
இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது. 
 
அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள திருமதி. ஜோஸ்பின் மேரி அவர்களும் நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் திருமதி யமுனாதேவி அவர்களும் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.
 
மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது. 
 
பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.