திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 மே 2020 (15:09 IST)

மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது! – வாணியம்பாடி ஆணையர் மீது வழக்குபதிவு!

வாணியம்பாடியில் பழக்கடைகளை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையர் மீது மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டுகளை கவிழ்த்துவிட்டும் அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.

நிலைமையை எடுத்து சொல்லி அவர்களை கடைகளை மூட சொல்லாமல் நகராட்சி ஆணையர் ஒரு ரவுடி போல செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோயம்பேடு நிலைமை வாணியம்பாடியில் ஏற்பட்டுவிட கூடாது என்று எண்ணி தான் அவ்வாறு செய்ததாக கூறிய அவர், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து இழப்பீட்டையும் வழங்கினார் ஆணையர்.

எனினும் நகராட்சி ஆணையரின் இந்த செயலை கண்டித்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து அவர்மீது வழக்கு தொடர்ந்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வாணியம்பாடி நகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென மாநில மணித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.