திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (13:01 IST)

ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு இலவச யாத்திரை! எந்தெந்த கோவில்களுக்கு தெரியுமா? - அறநிலையத்துறை அசத்தல் அறிவிப்பு!

Temples

ஆடி மாதத்தில் மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு கட்டணமில்லா யாத்திரையில் அழைத்து செல்லப்பட உள்ள நிலையில், அந்த கோவில்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லா யாத்திரை அழைத்து செல்ல உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் மண்டல வாரியாக கோவில்களுக்கான ஆன்மீக பயணம் ஜூலை 19ம் தேதி தொடங்குகிறது. இந்த பயணத்திற்கு அந்தந்த மண்டலங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டல வாரியாக எந்தெந்த கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்படும் என்ற விவரங்களை அமைச்சர் சேகர்பாபு அறிவுத்துள்ளார். அதன்படி

சென்னையில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிஸ் கார்னர் காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு பக்தி யாத்திரை செல்லப்பட உள்ளது.

திருச்சி - உறையூர் வெக்காளியம்மன் கோவில், கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில்

மதுரை - மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில்

கோயம்புத்தூர் - கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், ஆனமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில்

தஞ்சாவூர் - பெரிய கோவில் வராகியம்மன் கோவில், பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், திருக்கருக்காவூர் கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில்

திருநெல்வேலி - கன்னியாக்குமரி பகவதியம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், குழித்துறை சாமுண்டியம்மன் கோவில்

மண்டல வாரியாக மேற்கண்ட கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படும் நிலையில் அவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணப்பை மற்றும் அந்தந்த கோவில்களின் பிரசாதமும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உதவியாக பணியாளர்கள் சிலரும் உடன் செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அறநிலையத்துறை வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 17ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/188/document_1.pdf

Edit by Prasanth.K