சூடு பிடிக்கும் தேர்தல் களம்..! திமுக - அதிமுக சார்பில் தொடங்கியது நேர்காணல்..!
மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக மற்றும் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர். முதலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.
நேர்காணலின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். திமுக நடத்தும் வேட்பாளர் நேர்காணல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இன்று 20 தொகுதிகளுக்கும், நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
அதேபோல் அதிமுகவிலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று 20 தொகுதிகளுக்கும், நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.