வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் சில மாவட்டங்களில் அதிக கன மழை பெய்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கன மழை பெய்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாவட்டமே வெள்ள நீரில் மிதந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 8:00 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டம் அரூரில் 331 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீரில் மூழ்கி உள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை பாம்பாறு அணை நிரம்பி உள்ளதை அடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Edited by Mahendran