நாளை மறுநாள் கனமழை – வடமாவட்டங்களுக்கு நற்செய்தி !
நாளை மறுநாள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு கிரீடம் வைத்தாற்போல அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச் சலன மழைப் பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் சிலப் பகுதிகளில் வரும் மே 14 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு பலத்த சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை 32 மிமி மழைப் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 62 சதவீதம் குறைவான அளவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.