Last Updated : புதன், 21 செப்டம்பர் 2016 (23:58 IST)
விஜயகாந்த் வழக்கில் ஜெயலலிதா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை கொடுத்தாலும் கூட, அதற்கும் அவதூறு வழக்குத் தொடரப்படுவதாகவும், அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுவதாகவும் கூறி, விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், "அரசியல் விமர்சனங்களை நீங்கள் அரசியல் ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். அரசியல் எதிர்ப்புக்களை அவதூறு வழக்குகள் மூலம் ஒடுக்க முடியாது'' என்று கருத்துத் தெரிவித்தது.
இதுதொடர்பாக, செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த நோட்டீஸை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரே ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்கவும் உத்தரவிட்டிருந்தனர்
இதனடிப்படையில் ஜெயலலிதாவிடம் நோட்டீஸ் நேரடியாக வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் சார்பில் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜெயலலிதா பதில் மனுவைத் தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது.