வழிநெடுக்க பேனர்கள்.. கண்டும் காணாமல் போன எச்.ராஜா??

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (12:37 IST)
எச் ராஜா பங்கேற்ற கூட்டத்திற்காக, அனுமதியின்றி வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பேனர் அடித்து கொடுத்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. ஆனால் சாலையின் நடுவில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. ஜெயகோபால் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. 
சுபஸ்ரீயின் மரணத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகளும் சினிமா நடிகர்களும் பேனர் வைக்க வேண்டாம் என முடிவு செய்தனர். அதற்கேற்ப அதிமுக அமைச்சர்களான செல்லூர் ராஜூ மற்றும் ராஜேந்திர பாலாஜி தாங்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வைக்கப்பட்ட இருந்த பேனரை கழட்டிய பின்னாரே நிகழ்ச்சியை துவங்கினர். 
 
இப்படி பேனர் விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள போதும் எச்.ராஜாவோ வித்தியாசமானவராக இருக்கிறார். ஆம், சமீபத்தில் எச்.ராஜா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
எச்.ராஜா வருகிறார் என்றதும், பாஜகவினர் வழிநெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்களை கண்டும் எச்.ராஜாவும், போலீசாரும் காணாதது போலவே நிகழ்ச்சியை முடிந்து நகர்ந்தது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :