தினகரன் நீக்கம் ; கருத்து கூறிய ஹெச்.ராஜா : கட்டம் கட்டிய நெட்டிசன்கள்
அதிமுக துணைப்பொதுச்செயலாளரக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக துணைப்பொதுச்செயலாளரக தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும், அதிமுகவிற்கு ஜெயலலிதாதான் நிரந்த பொதுச்செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தீர்மானம் தினகரன் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெ.ராஜா “ சசிகலா மற்றும் தினகரன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம். தமிழகம் திருக்குவளை மற்றும் மன்னார்குடி குடும்பங்களிடமிருந்து விடுபடும்” எனக் குறிப்பிட்டுள்ளர்.
பாஜகவின் பிடியில் இருந்து தமிழகம் விடுபடும் நாள்தான் பொன்னாள் என பல நெட்டிசன்கள் இவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.