திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (08:14 IST)

போலி இ-பாஸ் ரூ.2000; கல்லா கட்டிய கும்பல்! – அரசு அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது!

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் aங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையை விட்டு வெளியேற இ-பாஸ் அவசியமாக உள்ளது. இந்நிலையில் தொழில் நிறுவனங்கள், திருமணம், உறவினர் மரணம் மற்றும் மருத்துவம் ஆகிய அவசர தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் சிலர் போலி இ-பாஸ்களை தயாரித்து மக்களுக்கு விநியோகிப்பதாகவும், அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போலி இ-பாஸ் தயாரிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ‘சைபர் க்ரைம்’ போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சென்னை பேசின்பிரிட்ஜில் வருவாய் ஆய்வாளராக உள்ள குமரன் மற்றும் அவரது சகாக்கள் சிலர் இணைந்து இவ்வாறாக போலி இ-பாஸ் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்கள் சுமார் 200 பேரிடம் தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாகவும் தெரிய வந்துள்ளது.