வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (16:41 IST)

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்: மேலும் ஒரு மாணவி தற்கொலை!

கடந்த சில நாட்களாகவே மாணவர்களின் தற்கொலை குறித்த செய்திகள் அடிக்கடி வெளி வந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருவது குறித்து பார்த்து வருகிறோம். குறிப்பாக நீட்தேர்வு அச்சம் காரணமாக அந்த தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
அதுமட்டுமின்றி தற்போது கடந்த சில வாரங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முடிவு என்றும் மத்திய மாநில அரசு எடுக்காததால் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன 
 
இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் அளவுக்கு அனைவரிடத்திலும் செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லை என்பதால் இந்த வகுப்புகள் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒருசில நிபந்தனைகளுடன் ஆன்லைன் வகுப்பை தொடர நீதிமன்றம் அனுமதித்தது
 
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்றும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் மன உளைச்சலில் இருந்த ஒரு சில மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர் 
 
இந்த நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த ஈரோடு மாவட்டம் நஞ்சை புளியம்பட்டி சேர்ந்த பள்ளி மாணவி ஹேமாமாலினி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது