வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:46 IST)

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்தது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.


 
 
இந்த மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் பலரும் நினைக்கின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு வந்து கண்ணீர் விட்டு அழுத நடிகை கௌதமி அவரது மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு பதில் கூற வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அவர் எழுதிய கடிதத்தில்,
 
ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவர். ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் நல்ல உதாரணம். பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார்.
 
சமீபத்தில் காலமான அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன.

 
பல மர்மங்கள் நிறைந்திருக்கும் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம்.
 
ஆனால் மக்களால் விரும்பப்பட்ட, தமிழக முதல்வராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறும் இல்லை. இந்த கடிதம் குறித்து நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன். என தனது கடிதத்தில் கௌதமி கூறியுள்ளார்.