நகரங்கள் முழுவதும் இலவச வைஃபை.. முக்கிய நகரங்களில் நியோ டைடல் பார்க்! – இளைஞர்களை கவரும் தமிழக பட்ஜெட் 2024!
தமிழக அரசு பட்ஜெட் 2024 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் முதல் கட்டமாக 1000 இடங்களில் இலவச வைஃபை இணைய சேவை வழங்கப்பட உள்ளது. பின்னர் இது மேலும் பல நகரங்கள், கிராமங்களுக்கு நீடிக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்காக சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டைடல் பார்க் செயல்பட்டு வரும் நிலையில், அதுபோல சென்னை, சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.