வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (09:19 IST)

வாழ விடுங்கள் இல்லை சாக விடுங்கள் - 8 வழிச்சாலை அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்தும் அளவீட்டு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

 
இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது.  
 
அதோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை, வேதிமலை என பல மலைகள் இரண்டாக உடைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

 
ஆனாலும், இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயமே அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், விளை நிலங்களை அரசு பிடிங்கிக்கொண்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்டம் குப்பனூர் ஊராட்சி சீரிக்காடு பகுதியில் தாசில்தார்  அன்புக்கரசி தலைமையில் சில அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். ஆனால், தங்கள் தோட்டத்திற்குள் அதிகாரிகளை செல்ல விடாமல் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த நிலங்களை நம்பித்தான் நாங்கள் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் எங்களின் தோட்டம், கிணறு, வீடு என அனைத்தும் இடிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் கண்ணீர் வடித்தனர். அதோடு, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதையை அரசு தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், கவலைப்படாதீர்கள்.. உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் எனக்கூறிவிட்டு, நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.