மர்மமான முறையில் காட்டு யானை பலி.! வனத்துறை அதிகாரிகள் விசாரணை..!!
மேட்டுப்பாளையம் அருகே மூலையூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது. அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து விவசாயிகள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு 5 வயது இருக்கும் என தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.