ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (12:45 IST)

தம்பதியிடம் 95 பவுன் நகையை அபகரித்த பெண் இண்ஸ்பெக்டர் கைது! - மதுரையில் அதிர்ச்சி!

கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையில் அவர்களது 95 பவுன் தங்க நகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் அபகரித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியரான ராஜேஷுக்கும் அவரது மனைவி அபிநயாவுக்கும் இடையே கடந்த சில காலமாக ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இருதரப்பினரும் திருமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்த நிலையில், அந்த காவல் நிலைய பெண் இண்ஸ்பெக்டரான கீதா இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் தனது வீட்டில் தனக்கு கொடுத்த 95 பவுன் நகைகளை தனது கணவர் ராஜேஷிடம் இருந்து பெற்று தரும்படி, மனைவி அபிநயா பெண் இண்ஸ்பெக்டர் கீதாவின் உதவியை நாடியுள்ளார். அதை தொடர்ந்து ராஜேஷ் தனது மனைவியின் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒப்படைத்துள்ளார்.

 

ஆனால் சில மாதங்கள் கழித்தே அந்த நகைகளை இன்ஸ்பெக்டர் கீதா தனது மனைவியிடம் ஒப்படைக்கவில்லை என ராஜேஷ்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருமங்கலம் போலீஸ் சூப்பரண்டிடம் தம்பதியர் புகார் அளித்த நிலையில் நடைபெற்ற விசாரணையில், இன்ஸ்பெக்டர் கீதா அந்த நகைகளை ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்து பணம் பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது.

 

அதை தொடர்ந்து நகைகளை தம்பதியரிடம் திரும்ப ஒப்படைக்க கீதாவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சில நகைகளை மட்டும் மீட்டுக் கொடுத்துவிட்டு 70 பவுன் நகைகளை திரும்ப தராமல் இருந்துள்ளார். இதனால் கீதாவை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ரம்யபாரதி உத்தரவிட்டுள்ளார்,. மேலும் நகையை அபகரித்த குற்றச்சாட்டில் கீதா கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K