1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:12 IST)

சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5,6,7,8,9 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வார்டு பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய் மூலம் கொங்கபட்டி ஊரணியில் சென்று தேங்கி வருகிறது.
 
முறையான வடிகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது கொங்கபட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையோரம் ஆறாக ஓடும் சூழல் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
 
கடந்த ஒரு வாரமாக வழக்கம் போல் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் ஆறாக செல்லும் நிலையில், இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கொங்கபட்டி பல்க் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய பல்க் நிறுவனத்தார் உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களை இறக்கி சாக்கடை கால்வாயில் இருந்த அடைப்பை சரி செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நோய் தொற்று பரவும் அபாய நிலையில் உள்ள சாக்கடை கால்வாயில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வைத்த பல்க் நிறுவனத்தினர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், சாக்கடை கால்வாயை சரி செய்வதில் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரிடையே உள்ள குளறுபடியை சரி செய்து சாக்கடை கால்வாயை முறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.