புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (14:30 IST)

பிறந்த பெண் சிசுவை உயிரோடு புதைத்த தந்தை! – கள்ளக்குறிச்சியில் கொடூரம்!

விழுப்புரம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை அவரது தந்தையே உயிரோடு மண்ணில் புதைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு அதே பகுதியில் உள்ள சவுந்தர்யா என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

தனக்கு பெண் குழந்தை பிறந்ததில் வரதராஜ் வெறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனது மனைவியிடம் வந்து பெண் குழந்தை வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சவுந்தர்யா நன்றாக உறங்கி கொண்டிருந்த நேரம் யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கி சென்ற வரதராஜ் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றிற்கு கொண்டு சென்று பச்சிளம் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்துள்ளார்.

திடீரென கண் விழித்த சவுந்தர்யா குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். தனது தாயுடன் குழந்தையை தேட தொடங்கியவர் ஆற்றில் தனது கணவர் குழந்தையை புதைத்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வரதராஜை கைது செய்தனர். தந்தையே தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.