#BREAKING: ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!
கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 299 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கப்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.