அடுத்தடுத்து மோதிய ரயில்கள்; வரலாறு காணாத கோர சம்பவம் நடந்தது எப்படி?
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு அதிவிரைவு ரயில் (வ.எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல மேற்கு வங்கத்தின் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு கோரமண்டல் விரைவு ரயில் (வ.எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி ஹவுரா அதிவிரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதில் சில பெட்டிகள் கவிழ்ந்து விழுந்தன. அதில் சில ரயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.
அந்த சமயம் ஹவுரா எக்ஸ்பிரஸ் பெட்டிகள் விழுந்த ரயில் தடத்தில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்த நிலையில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில ரயில் பெட்டிகள் அதற்கும் அடுத்த ட்ராக்கில் விழுந்த நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் மோதி அதுவும் விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாகவும், 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல தமிழர்கள் பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நபர்கள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இன்று வரை மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
Edit by Prasanth.K