செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (19:24 IST)

மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு

Thangam Thennarasu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள் தங்களது   மின்கட்டணத்தை அபராதத் தொகை   இல்லாமல்   செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாவது:

''கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.   

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த  மின் நுகர்வோர்களுக்கு  மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள்  தங்களது   மின்கட்டணத்தை அபராதத் தொகை   இல்லாமல்   செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.  

2. ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.  

3. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக  பயன்பாடு, தொழிற் சாலைகள்,  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்   மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்''என்று தெரிவித்துள்ளார்