2000 பேருக்கு அரிசி - பருப்பு - எண்ணெய் அடங்கிய மளிகை தொகுப்பு- அமைச்சர் உதயநிதி
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு உதவி வழங்கி வருவதுடம், நிவாரண உதவித்தொகை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இயல்பு நிலையை மீட்டெடுக்க உழைத்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''மழை - வெள்ள பாதிப்பை எதிர்கொண்ட பொதுமக்களுக்கும் - அவர்களுக்கு துணை நின்று, இயல்பு நிலையை மீட்டெடுக்க உழைத்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை மேற்கு மாவட்டம், அண்ணா நகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் - மின்வாரிய ஊழியர்கள் - மாநகராட்சிப் பணியாளர்கள், பொதுமக்கள் என 80,000 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.கே. மோகன் அவர்கள் ஏற்பாட்டில் நிவாரண உதவிகளை வழங்குவதன் அடையாளமாக, 2000 பேருக்கு அரிசி - பருப்பு - எண்ணெய் அடங்கிய மளிகை தொகுப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கினோம்.
மேலும், வட்டக் கழகம் வாரியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான டோக்கனை வட்டக்கழகச் செயலாளர்களிடம் ஒப்படைத்தோம்''என்று தெரிவித்துள்ளார்.