’மனைவி செய்வினை வைத்தார்’... அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் !
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, மனைவி எனக்கு செய்வினை வைத்ததால், நான் மதுவுக்கு அடிமையாகி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக கட்சிக்கு சொந்தமான அண்ணா அறிவாலயத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக ஆசாமி ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்தார். உடனடியாக அறிவாலயத்திற்கு விரைந்த போலீஸார் மோப்ப நாய்கள் துணையோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிக்குண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து போன் செய்த ஆசாமியை தேட தொடங்கினர். அவரது மொபைல் எண்ணை வைத்து ட்ராக் செய்தது மூலம் ஆசாமி தேனாம்பேட்டை அருகில் உள்ள தியாகராயநகரை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது.
உடனடியாக, தி.நகர் எஸ்.பி கார்டன் பகுதியில் உள்ள கணேசனின் வீட்டுக்கு போலிஸார் இரவில் சென்றனர். அங்கு அவர் போதையில் இருந்துள்ளார். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் எதற்காக அண்ணாஅறிவலாயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாய் என்று கேட்டு, கணேஷை போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர், என் மனைவிக்கும் எனக்கும் பிரச்சனை உள்ளது. அதனால் அவர் எனக்கு செய்வினை வைத்துவிட்டார். அதனால் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன். போதையில் நான் 100க்கு தொடர்பு கொண்டு, அறிவாலயத்தில் வெடிகுண்டு உள்ளதாகக் கூறிவிட்டு போதையில் படுத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.