செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (12:04 IST)

கை விரித்த ஜனாதிபதி ; கோபம் தீராத ஆளுநர் - கலக்கத்தில் எடப்பாடி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் மீது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் கோபமாகவே இருப்பதாக தெரிகிறது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகரை ஆலோசிக்காமல் அல்லது அவரிடம் தெரிவிக்காமல் எடப்பாடி தரப்பு செயல்பட்டதாக தெரிகிறது. 
 
மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று அது ஆளுநருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆளுநர் வித்யாசகர் கடுமையான கோபத்தில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூறிவிட்டுத்தான் இதை செய்தோம் என்ற எடப்பாடியின் விளக்கத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், ஆளுநரிடம் கூற வேண்டாம் என நான் கூறினேனா? என அருண் ஜெட்லியும் கழண்டு கொண்டார்.
 
எனவே, ஜனாதிபதி மூலம் முயன்று பார்க்கலாம் எனக் கருதி, துணை சபாநாயகர் தம்பிதுரையை டெல்லிக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநரை கேட்காமல் நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் ஆளுநரை,  நான் சமாதனப்படுத்த முடியாது என ஜனாதிபதியும் கை விரித்து விட்டாராம்.  
 
எனவே, ஆளுநரை எப்படி சமாதானப்படுத்துவது என்பது தெரியாமல் எடப்பாடி தரப்பு முழித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில்தான், ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று சென்னை வருகிறார். எனவே, ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயல்வார் எனத் தெரிகிறது.