செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (20:01 IST)

நாங்குநேரிக்காக வியூகம் அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் இந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது.
 
எந்த நேரத்திலும் இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இடைத்தேர்தலை சந்திக்க இப்போதே அதிமுக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் செல்வாக்காக உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அமமுகவில் இருக்கும் மற்ற தலைவர்களையும் அதிமுகவிற்கு இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டதாக தெரிகிறது. 
 
மேலும் எதிர்த்தரப்பில் நாங்குநேரி தொகுதி திமுகவுக்கா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கா? என எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் அதிமுக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டது. இருப்பினும் திமுக தரப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரியில் போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் வரும் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றும் அப்படியே போட்டியிட்டாலும் அந்த கட்சியால் அதிமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது என்றும் கூறாப்படுவதால் இந்த தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது