திமுக கூட்டணி கட்சிகளுக்கு நான் அழைப்பு விடுக்கவே இல்லை: ஈபிஎஸ் விளக்கம்..!
தமிழகத்தில் 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்ச் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக கூட்டணி கட்சிகளுக்கு நான் எந்த இடத்திலும் அழைப்பு விடுத்ததே இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், "திமுகவை வீழ்த்தும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம் என்றுதான் கூறினேன். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் குறிப்பிட்டு நான் அழைப்பு விடுக்கவில்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அவரது இந்த விளக்கம், கூட்டணி அரசியல் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுகவின் கவனம், திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை ஒருங்கிணைத்து, மாற்றத்திற்கான சக்தியாகத் திகழ்வதில் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
Edited by Mahendran