ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (11:57 IST)

கலையும் அதிமுக கூடாரம்: கலக்கத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அண்ட் கோ!

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளது ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.   
 
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது.  
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  
 
இந்த குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழகர்கள் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததாலும், மத நல்லினத்திற்கு எதிரானது என தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு அதிமுக இந்த குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்து இருந்தால் இது தோல்வியில் முடிந்திருக்க கூடும்.  
இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கம் செய்யப்பட்டார். இந்த முடிவை ஜமாத் உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி எம்.பி. ஒருவரை ஜமாத் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்குவார்கள் என அதிமுக தலைமை உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பார்க்காததால் இது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதோடு, கடந்த சில நாட்களாக அதிமுகவில் இருந்து பல இஸ்லாமியர்கள் வெளியேறியதாக வரும் செய்தியும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பிற்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. வெளியேறும் தரப்பினரை சமாதானம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.