ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (16:43 IST)

தரக்குறைவான பேச்சு - வட்டாட்சியரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் (வீடியோ)

சக ஊழியர்களை தரக்குறைவாக பேசி வரும் வட்டாட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

 
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் தாசில்தார் முருகன் என்பவர் சக ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும், அவர்களை நடத்துவதும், மேலும் ஒருமையில் பேசுவதுமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காரணத்தினையொட்டி அவரது நடவடிக்கைகளை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 
கடந்த 7 ம் தேதி தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் இரண்டு) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பொதுக்குழுவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. 
 
இதனை மனதில் கொண்டு உள் நோக்கத்துடன் கடந்த 18 ம் தேதி கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெளி நபர்களை அனுமதித்து ஒரு சாதாரண சம்பவத்தை வட்டாட்சியர் முருகனே நிகழ்த்தி விட்டு, சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை அளித்துள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப் இரண்டு) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடவூர் வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் என்பவர் பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த பாரபட்ச நடவடிக்கையை கைவிட்டு, பணி விடுவிப்பு ஆணையை திரும்ப பெறக்கோரி பணி விடுவிப்பு ஆணையை திரும்ப பெறும் வரை அனைவரும் அலுவலக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
பேட்டி : கி.தனசேகரன் – மாநில அமைப்பு செயலாளர் – தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் இரண்டு) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம்

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்