வெள்ளி, 6 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (12:18 IST)

திமுக அறிக்கையை சமூக ரீதியாக கொச்சை படுத்தி பதிவு! – வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டமன்ற தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற கலப்பு மண நிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் திமுக சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் சாதி மறுத்து கலப்பு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்கு 8 கிராம் தங்கமும், ரொக்கமாக ரூ.60 ஆயிரம் நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுகவின் இந்த அறிக்கையை சமூகரீதியாக விமர்சித்து சிலர் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்த நிலையில் அவதூறு பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.