வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (17:42 IST)

நம் கட்சியின் கிளை இல்லாத ஊரே இல்லை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்

dinakaran
நம் கட்சியின் கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை அமமுக எட்டியுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் தினகரன், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில்,  பொதுச்செயலாளர், தலைவர், துணைதலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. அமமுக தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.சசிக்கலாவுக்காக நீண்ட நாட்களாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி. தினகரன் பேசியதாவது:

என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. நம் கட்சியின் கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை அமமுக எட்டியுள்ளது. நாம் அனைவரும்  ஒன்றிணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக கட்சியானது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பயன்படுத்திய வெற்றிச் சின்னம் மற்றும் பணபலத்தைப் பயன்படுத்தி இயங்க வைத்து வருகிறது. அமமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை; மதிய உணவு மட்டும் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.